கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!
2021ல் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய கே.டி.ராகவன், மாநில பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டன.
இதில், குறிப்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கே.டி. ராகவன் முன்னதாக 2021-இல் பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் ஆவார்.
ஆனால், அவரது பெயரில் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதை அடுத்து, அவர் அப்பதவியை ராஜினாமா செய்திருந்தார். இப்போது மீண்டும் அவருக்கு மாநிலப் பிரிவு அமைப்பாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த மாற்றங்கள் தமிழக பாஜகவின் அரசியல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது