கூட்டணி குறித்து பாஜக உயர்மட்ட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே எங்களிடம் சொல்லிவிட்டனர்.
மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை உறுதி செய்வார்கள், மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி உறுதி, இறுதி என இப்போதே கூற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு தற்போது கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.