புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை முதல் நடைபெறவிருக்கிறது என திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், திமுகவின் அடித்தளம், அடிப்படை தொண்டர்கள் தான். தற்போது இருக்கும் 1 கோடி உறுப்பினர்களுடன் மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். கொளத்தூரில் நடக்க உள்ள புதிய உறுப்பினர் சேர்க்கையை நான் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளேன்.
தலைவர் கலைஞருக்கு அவருடைய நூற்றாண்டு தொடக்க விழாவில் நாம் செலுத்தும் நன்றியாக, உடன்பிறப்புகளாம் உறுப்பினர்களை இருமடங்காக்கி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று 22-03-2023 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை (ஏப்ரல் 4) முதல் நடைபெறவிருக்கிறது.
திமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களைத் தவிர்த்து, புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தலைமைக் கழகத்தால் மாவட்டக் கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாய். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அதனால் புதிய உறுப்பினர் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் உள்பட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள்www.udanpirappu.comஎன்ற இணைய வழியாகவும் உறுப்பினராக சேரலாம். அவர்களின் விவரங்களும் மாவட்டக் கழகத்தினரால் சரிபார்க்கப்பட்ட பிறகே உறுப்பினர் அட்டை வழங்கப்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு உறுப்பினர் சேர்ப்பு பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டுகிறேன்.
திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்களும், பெற இருப்பவர்களும் புதிய உறுப்பினர்களாக விரும்பி இணையும்போது, கழகத்தின் வலிமை பெருகும். அது அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுக்கு உத்தரவாதத்தை வழங்கும். எனவே, தமிழர்களாய் தலை நிமிர்வோம், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்ந்திடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.