En Mann En Makkal : டெங்கு, மலேரியா கொசு போல திமுக ஒழிக்கப்பட வேண்டும்.! பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.!

Annamalai BJP State President

தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தனது நடை பயணத்தை தொடங்கினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,  இந்தியா தற்போது பாதுகாப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன தெரியுமா.? எத்தனை தீவிரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள் தெரியுமா.? ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் எங்கேயாவது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் திமுகவினரும், திமுக அமைச்சர்களும் தான் பிரதமர் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

ஒரே குடும்பத்திற்காக தமிழக முதல்வர் உழைத்து வருகிறார். மகனும், மருமகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடக்கிறது என்று கூறிய அண்ணாமலை, சிலருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். எப்படி வாழ வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் தர்மம். அது எல்லா காலத்திலும் நிலைத்திருப்பது. அதற்கு முடிவு இல்லை. சனாதனம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்துத்துவம் என கூறினார்.

மேலும், விவசாயி, கூலி தொழிலாளி, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பாஜகவில் உள்ளனர். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. தமிழகத்தில் டெங்கு, மலேரியா கொசு எப்படி இருக்கக் கூடாதோ, அதே போல் திமுகவும் தமிழகத்தில் இருக்கக் கூடாது. திமுக என்றால் தீய சக்தி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதான்.

சுதந்திரம் கொடுத்து இத்தனை ஆண்டுகளாகியும் கொடைக்கானல் மலை கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகளின்றி குழந்தைகள் பிறக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் அதற்கு மத்தியிலும், தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்