லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி.
தமிழகம் முழுவதும் அரசு துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 12 அரசுத் துறை அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை, திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை, சேலம், கடலூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை , விருதுநகர், பரமக்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் திடீர் சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.