காலையில் ஐஐடி மாணவர் புஷ்பக் வகுப்புக்கு வராமல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து நிர்வாகம் விளக்கம்.
தொடர் தற்கொலை:
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், சென்னை ஐ.ஐ.டியிலும் கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
ஐஐடி மாணவர் தற்கொலை:
இதுபோன்று கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்த சமயத்தில், சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 மாணவர்கள் தற்கொலை:
சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி, 6 ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டியில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
ஐஐடி நிர்வாகம் விளக்கம்:
இந்த நிலையில், மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் சென்னை ஐஐடியில் 2 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சமூக அழுத்தம்:
காலையில் நன்றாக பேசி கொண்டிருந்த மாணவர் புஷ்பக் வகுப்புக்கு வராமல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பொருளாதாரம், குடும்ப பிரச்சனை, மன அழுத்தம் காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விசாரணை அறிக்கை:
மாணவர்களுக்கும், பேராசியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும். தற்கொலைகளை குறைக்க மாணவர்களின் ஆலோசனைப்படி, சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தகத்து.