கடலூரில் அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவு!

பாமகவின் NLC முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து, போக்குவரத்துக் கழகம் உத்தரவு.
கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு, அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சிக்கு எதிராக இன்று பாமகவினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற நிலையில், போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சு சம்வபத்தில் காவலர்கள், செய்தியாளர்கள் என பலர் காயமடைந்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு, அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.