செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று உத்தரவு!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? கைது தொடர்பான 3 மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

senthil balaji bail

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? கைது தொடர்பான 3 மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் உள்ளதால், அவருக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விசாரணை மேற்கொள்ள நேரில் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். அப்போது, அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே திமுக சார்பில் தாக்கல் செய்த 3 மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்று, அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில், 3 மனுக்கள் மீதான உத்தரவு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரியும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் திமுக தரப்பில் தாக்கல் செய்த 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவும் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதுபோன்று, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க கோரிய மனு மற்றும் செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மீதும் இன்று உத்தரவு வழங்கப்படுகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைதான நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.