பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ளதற்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சாக்காகக் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பைப் போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தமிழக அரசுக்கு வரி குறைப்பு கோரிக்கைதமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு “மாற்றம்” என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அந்த அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் மீதான விற்பனை வரியைத் தமிழக அரசு குறைக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிக்கை, மத்திய அரசின் விலை உயர்வு மற்றும் மாநில அரசின் வரி சுமை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.