“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
உங்களுக்கான வேலையை மட்டும்தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? ஆர்ப்பாட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) போராட்டம், அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், வரும் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனுதாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் தவெக சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், போலீசுக்கு அழுத்தம் தரவேண்டாம் என தவெக-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பே கடிதம் தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. போலீசாருக்கு நிறைய வேலைகள் உள்ளதாக தெரிவித்த கோர்ட் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவெகவுக்கு என்ன அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், உங்களுக்கான வேலையை மட்டும்தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? ஆர்ப்பாட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பேற்பீர்களா? ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஒற்றுமைக்கு எதிராகவோ (அ) அரசியல் அமைப்பிற்கு எதிராகவோ பேசமாட்டோம் என்று உறுதி அளிப்பீர்களா? ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலோ (அ) முடிவிலோ கூட்டம் போன்ற நிகழ்வுகள் ஏதேனும் நடைபெறவுள்ளதா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைத்துள்ளது.
இதனையடுத்து, எந்த ஆர்பாட்டத்திற்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியதை கேட்ட நீதிபதி, தவெக மனு அளித்த 1ம் தேதியை கணக்கில் கொண்டு 15 நாட்களுக்கு ஆர்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.