அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை தேடுகிறது காவல்துறை.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கடந்த மாதம் சென்னை உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர். பின்னர் அவதூறு வழக்கு தொடர்பான வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில், சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார் எஸ்.ஜி சூர்யா. அதன்படி, மதுரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் கைதாகி ஜாமின் பெற்ற நிலையில், நிபந்தனைகளை மீறி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடாத எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை மேற்கொள்ள அவரை மதுரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சிதம்பரம் போலீசார் மேலும் ஒரு வழக்கில் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜாமீன் நிபந்தனைகளை மீறி அவர் டெல்லி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் மதுரை போலீசார் சூர்யாவிடம் விசாரிக்க, அவரை தேடி வருகின்றனர். அவர் நிபந்தனைகளை மீறியதால் ஜாமீன் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
