கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சோழ பேரரசின் பெருமையை விளக்கும் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடிபார்வையிட்டார்.

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் (சோழீஸ்வரர் கோயில்) சாமி தரிசனம் செய்தார்.
மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் அங்கு வருகை தந்திருந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்திறங்கினார்.
இதனை தொடர்ந்து, திருக்கோவிலின் சுற்று மாளிகையில் சிலைகள், சிற்ப வேலைப்பாடுகளை பார்வையிடும் பிரதமர்.. மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்று பெருமைகளையும், கோவில் கட்டப்பட்ட வரலாற்றையும் கேட்டறிந்தார்
இதையடுத்து, சோழீஸ்வரர் கோயிலில்அங்கு பிரகதீஸ்வரர், துர்கா, பார்வதி, முருகன் சன்னதிகளில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். முதலில், பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், பெருவுடையாருக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
அப்பொழுது, ஓதுவார்கள் தமிழில் ஓத பிரகதீஸ்வரரை பிரதமர் மோடி மனமுருகி வணங்கினார். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில், தனது தொகுதியான வாரணாசியிலிருந்து கொண்டு வந்த கங்கை நீரால் பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார்.
முன்னதாக, கோயிலுக்கு செல்லும் வழியில், பொன்னேரியிலிருந்து பிரகதீஸ்வரர் கோயில் வரை சுமார் 3-4 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவாக பயணித்து மக்களை சந்தித்தார்.