DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கெடு வைத்தது திமுக.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியலில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் டி ஆர் பாலு என பலர் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
#DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று கெடு வைத்துள்ளார்.
மேலும், அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல நேரிடும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அண்ணாமலைக்கு உண்மையை சொல்லி பழக்கமில்லை, ஊடகங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி இருக்கிறார் எனவும் குற்றசாட்டியுள்ளார்.