தமிழகத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமாரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடதமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
