இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என பேரவையில் முதலமைச்சர் பேச்சு.
தமிழக அரசின் சார்பில் 2023 – 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதில் குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என அறிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை:
அதன்படி, அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புரட்சியை ஏற்படுத்தும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கு கிடையாது:
இருப்பினும், ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் பயன் பெற வாய்ப்பில்லை, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைவர், மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.
ஒரு கோடி மகளிர்:
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், 1 கோடி மகளிர், மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள் என கூறினார். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என தெரிவித்தார்.