அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை – ஆர்எஸ் பாரதி பேட்டி!

அரசியல் நோக்கத்திலேயே சோதனை நடத்துவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு.

RS Bharthi

அரசியல் நோக்கத்திலேயே சோதனை நடத்துவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு.

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக பணிநியமன முறைகேடு புகாரில் காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய பதிலளிக்கவில்லை. தற்போது அமித்ஷா தமிழகம் வந்துவிட்டு போனதுக்கு பிறகு சோதனை நடந்தால் மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டார்களா?.  சென்னை, வேலூரில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு சென்றுள்ளார் அமித்ஷா. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை அதிமுக ஆட்சி தொடர்பானது.

திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிய விரும்பினோம். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நிலை என்ன ஆனது என கேட்டோம், அதிகாரிகளிடம் பதில் இல்லை. அவரையாவது இங்கு அனுப்புங்கள் பார்த்துவிட்டு போகிறோம் என்று கேட்டதற்கு, இதுவரை பதிலளிக்கவில்லை.

தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே, தலைமைச் செயலகத்தில் அத்துமீறி 2 மணி நேரமாக சோதனை செய்து வருகின்றனர் என குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இதற்கு முன் நடந்த சோதனையை கண்டித்து திமுக தான். திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி கிடைக்குமா? 10 நிமிடத்தில் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என ஆர்எஸ் பாரதி கூறினார்.

மேலும், அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறிட ஆர்எஸ் பாரதி, இந்த சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கர்நாடகாவில் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் வீட்டில் பலமுறை சோதனை நடந்தது என்ன ஆனது? எனவும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல, இதுபோன்ற சோதனைகளால் ஒரு மனிதனின் புகழை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.