SellurKRaju: அண்ணா பற்றி தவறாக பேசினால் நாக்கு துண்டாகும் – செல்லூர் ராஜு எச்சரிக்கை

சனாதனம் குறித்து பேசியதை கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 11-ம் தேதி

selloor raju

சனாதனம் குறித்து பேசியதை கண்டித்தும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 11-ம் தேதி சென்னையில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியபோது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டின் 4-ம் நாளன்று, அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்து பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, பார்வதி தேவியைப் பற்றி விமர்சித்தார் என்றும் மறுநாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்க தேவர் உமயவளை தப்பாக பேசியது யார் என கேள்வி எழுப்பி உக்கிரமாக பேசியதாகவும், பின்னர் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணாதுரை வந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

அதாவது, முத்துராமலிங்க தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்கிற வகையில் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக, திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சால் அதிமுக – பாஜக இடையே மீண்டும் மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் பேசுகையில், அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணாமலை கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கு கவலையில்லை, அவதூறாக பேசக்கூடாது. நடக்காத விஷயங்களை நேரில் பார்த்ததுபோல் மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண்டும். பாஜகவை வளர்ப்பதற்காக மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது என அண்ணாமலை கருத்துக்கு கடுமையாக சாடினார்.

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது எனவும் கூறினார். இந்த நிலையில் மதுரையில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவுக்குத்தான் முழு உரிமை உண்டு.  அண்ணா பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர்.

அண்ணா பற்றி அவதூறாக பேசினால் அவர்களின் நாக்கு அழுகிவிடும். எம்ஜிஆரின் பெயரை கூட மறந்துவிடுவோம், ஆனால் அண்ணாவின் பெயரை மறக்க முடியாது. அண்ணா அவர்களையும், எம்.ஜி.ஆர் அவர்களையும் வேறு வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம் படைத்தவர்கள்.

இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அவரின் பெயரைத்தான் எங்கள் கட்சிக்கே வைத்துள்ளோம். தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலி பேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான் என பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.