தமிழக மருத்துவத்துறையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழக மருத்துவத்துறையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். ரூ.40.05 கோடியில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கை கொண்ட CCU BLOCK நிறுவப்படும். இதுபோல் நாமக்கல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகரில் 50 படுக்கை கொண்ட CCU BLOCK நிறுவப்படும்.
CCTV கேமரா:
கிராமப்புற, நகர்புறங்களில் உள்ள 2286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் CCTV பொருத்தப்படும். காஞ்சிபுரத்தில் ரூ.230 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட உள்ளது.
நடப்போம் நலம் பெறுவோம்:
நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும்.
மருத்துவ உபகரணங்கள்:
நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும். கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரத்த ஓவியத்துக்கு தடை:
மேலும் அமைச்சர் கூறுகையில், ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவதன் மூலம் நோய் தொற்று பரவல் ஏற்படுகிறது. காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரையக்கூடிய புதிய கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஓவியங்களை வரைவதற்கு ரத்த ஓவிய கூடங்கள் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கருத்தில் கொண்டு மார்ச் 10ம் தேதி 1,000 முகாம்கள் நடத்தப்பட்டன.
மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை:
தமிழ்நாட்டில் 58,533 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றார். மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதாவில் ஆளுநர் ஆர்என் ரவி சில இரண்டாவது முறையாக சில விளக்கங்களை கேட்டுள்ளார் என்றார்.