SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது....கோவை மாவட்டத்தில் 6,50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

tn sir 2025

சென்னை :தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளின் நோக்கம், இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்களை நீக்கி, பட்டியலை தூய்மையாக்குவதாகும்.வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டவற்றைத் திரும்பப் பெற்று, வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

ஆரம்பத்தில் ஒரு மாதத்தில் இப்பணிகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, டிசம்பர் 14-ஆம் தேதியுடன் விண்ணப்பங்கள் விநியோகம், பூர்த்தி மற்றும் ஆன்லைன் பதிவேற்றம் 100 சதவீதம் நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் பெயர் நீக்கப்பட்ட விவரங்களும் மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1.93 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கங்கள் இறந்தவர்கள், குடிபெயர்ந்தோர், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளன.இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது தவறான நீக்கம் ஏற்பட்டவர்கள், படிவம் 6 மூலம் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆட்சேபனைகளை ஜனவரி 18 வரை தாக்கல் செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும்.