தமிழக மீனவர்களை தாக்கி, 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்ற இலங்கை மீனவர்கள்...!

Sri Lankan fishermen have attacked Tamil Nadu fishermen and taken away goods worth Rs. 3 lakhs from the Vedaranyam Mediterranean.

வேதாரண்யம் நடுக்கடலில் வைத்து இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவா, சிவகுமார் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 3 பேர் நேற்று மதியம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். சுமார் 15 மைல் தொலைவை கடந்து வேதாரண்யம் நடுகடலில் இரவு 10 மணியளவில் மீனவர்கள் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சூழ்ந்து, அவர்களிடம் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், மீனவர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் படகை தாக்குவதை தடுக்க முயன்ற சிவக்குமார் மீது அரிவாளால் வெட்டியுள்ளனர்.

மேலும், மற்ற இரண்டு மீனவர்களையும் கட்டைகளால் தாக்கி, மூன்று லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். இதனை அடுத்து கொடூரமான காயங்களுடன் அதிகாலை கரை திரும்பிய தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.