தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை இத்தோடு ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சீமான் எச்சரிக்கை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான சீமான் வெளியிட்டுள்ள, வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போர் குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தொல் தேசிய இனத்தின் மக்களான தமிழர்களை பணத்தை வாங்கிக்கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பது அபத்தத்தின் உச்சமாகும்.
இதனை வன்மையாக எதிர்க்கிறேன். தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது என கூறியுள்ளார்.
தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை இத்தோடு ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
unknown node