வரும் 20-ஆம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. 2023-24-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொழில்துறை சார்பில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை பற்றியும், ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.