தமிழ்நாடு தேர்தல் : சென்னையில் வாக்குகள் குறைவு, சதவீதம் அதிகம்!

சென்னை மாவட்டத்தில் இந்த முறை 23.69 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

Hero Image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 85.15% ஆக பதிவாகி, தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை சுமார் 4 கோடி 80 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலை விட தபால் வாக்குகள் உட்பட 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வாக்களித்திருப்பது, மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு பெரிதும் அதிகரித்துள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.

முன்னதாக தமிழக வரலாற்றில் அதிகபட்ச வாக்குப்பதிவு 2011 சட்டமன்றத் தேர்தலில் 78.2% ஆக இருந்தது. இந்த முறை அதை விட கணிசமாக அதிகமான 85.15% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியே ஆகும். இரண்டு இடங்களில் வாக்குரிமை பெற்றிருந்தவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, ஒரு இடத்தில் மட்டும் வைக்கப்பட்டு மற்றொன்று நீக்கப்பட்டது.

அதேபோல், இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டன. இதன் காரணமாக போலி வாக்காளர்கள் குறைந்து, உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை துல்லியமாக அமைந்ததால் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் சென்னை மாவட்டத்தின் நிலவரமாகும். 2021 தேர்தலில் சென்னையில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை 23.69 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் சதவீத அடிப்படையில் பார்க்கும்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2021ஆம் ஆண்டு சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் 60% ஆக இருந்தது. இந்த முறை அது 83.7% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம், Special Intensive Revision (S.I.R) மூலம் சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சத்திலிருந்து 28.30 லட்சமாக குறைக்கப்பட்டதுதான். போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், உண்மையான வாக்காளர்கள் விகிதாசாரம் அதிகரித்து, வாக்குப்பதிவு சதவீதமும் பெருமளவில் உயர்ந்துள்ளது.