குடியரசு தலைவர் தமிழக வருகை ரத்து.. திறப்பு விழாவில் பங்கேற்கமாட்டார்!

ஜூன் 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்.

Droupadi Murmu President

ஜூன் 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்.

சென்னை கிண்டியில் புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்க வர வேண்டும் என சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

இதனால், ஜூன் 5-ஆம் தேதி இந்த நிகழ்ச்சிக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருவார் என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்திருந்தது. இதுபோன்று, சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும், குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் தமிழக வருகை ரத்து செய்யபட்டுள்ளது. வரும் 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதால் தமிழகம் வருவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் மருத்துவமனையை திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி, குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் நேரில் அழைப்பு விடுத்திருந்தார்.