இன்று தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் புதிய திட்டங்கள், உதவித்தொகை உயர்வு, முதியோர் உதவித்தொகை மற்றும் செப்டம்பர் 15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் உதவித்தொகை திட்டம் தொடங்கும் உள்ளிட்டவைகளையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட்டை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நாளை இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
இதனிடையே, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது. அன்றே தினமே பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.