மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நிரந்தர பணி நீக்கம் – ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

tasmac

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பாக காணொளி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மதுபானங்கள் கூடுதல் விலை விற்பனை தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரைகள் அடிப்படையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எனவே அனைத்து கடைப்பணியாளர்களும் கீழ்க்காணும் அறிவுரைகளை தவறாது பின்பற்றி பணிபுரியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மதுபான சில்லறை விற்பனைக் கடைப்பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதல் விலை விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை விற்பனை ரூ.10/- கண்டறியப்படும் பட்சத்தில் விற்பனை செய்த கடை விற்பனையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார், மேலும், கூடுதல் விலை விற்பனை செய்வதை தடுக்க தவறிய சம்மந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடை மேற்பார்வையாளர்கள் கடையின் வேலை நேரம் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆஜரில் இருக்க வேண்டும். கடையினை விட்டு வெளியே செல்லும் போது நகர்வுப் பதிவேட்டில் உரிய காரணத்தை பதிவிட்டுச் செல்ல வேண்டும். அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கடையில் அதிக விற்பனையாகும் நேரமான மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்டிப்பாக கடையில் இருக்க வேண்டும்.

அவ்வாறு கடைப்பணியில் ஆஜரில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும். மேலும் இரண்டாவது முறை கடைப்பணியில் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை குறைவான கடைக்கு பணிமாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்