கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக தமிழக அரசு குற்றசாட்டு.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் காலியாகி இரண்டரை மாதமாகியும் மத்திய அரசு அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் காலியாகிவிட்டன. அதன்படி, கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் கார்பிவேக்ஸ் ஆகிய தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை என கூறப்படுகிறது.
6.25 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து அனுப்ப தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் மத்திய அரசு அனுப்பவில்லை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை என்று ஏப்ரல் 10-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. 5 லட்சம் கோவிஷீல்டு, 50,000 கோவாக்சின், 75,000 கார்பிவேக்ஸ் டோஸ்கள் கேட்டு மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
தடுப்பு மருந்துகள் இல்லாததால் சென்னையில் 2-வது மற்றும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா குறைந்துவிட்டதை அடுத்து தடுப்பூசி உற்பத்தி செய்யாததால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும், செங்கல்பட்டில் உள்ள ஆலையில் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்புகள் இல்லாததற்கு மத்திய அரசே காரணம் என தமிழக அரசு குற்றசாட்டியுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ராசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் தமிழக அரசு குற்றசாட்டியுள்ளது.
