காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அத்துடன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர்.
தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமது ஆட்சியில் மதச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர்.
சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை, பனையூரில், கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.