வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே, டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டும் வருகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, தமிழகத்தை பொறுத்தவரையில் 25-05-2025 மற்றும் 26-05-2025 வரை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதே சமயம், தென்மேற்கு பருவமழை, கேரளாவில் நேற்று (24-05-2025) துவங்கி உள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை நேற்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக இன்றும் காலையிலும் சில இடங்களில் லேசானது மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.