இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் இல்ல..டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்!

எப்போது பார்த்தாலும் சண்டை என்றால் மக்களுக்கு என்ன பலன்? என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், சட்டமன்றத்தில் நிலவிவரும் தொடர் அமளிகள் மற்றும் விவாதங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக, கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த் சில முக்கியமான விஷயங்களை பற்றி பேசினார்.

சட்டப்பேரவையில் அவர் உரையாற்றுகையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பேரவையின் நடவடிக்கைகளைப் பொறுமையுடன் கவனித்து வருவதாகவும், மானியக் கோரிக்கைத் விவாதங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து நிகழ்வுகளும் இங்கு நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தான் ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ சார்ந்தவர் அல்லாமல், பொதுவான ஒரு சட்டமன்ற உறுப்பினராகவே மக்களின் நலனுக்காக இங்கே பேசுவதாகக் குறிப்பிட்டார்.

தினந்தோறும் மாலை 6.30 மணி வரை பேரவைக் கூட்டம் நீடிப்பதற்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்வதிலும் சண்டையிட்டுக் கொள்வதிலுமே நேரம் கழிவதாகவும், இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் என்ன பயன் கிடைக்கிறது என்று வினவினார்.

இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியினரையும் குறை கூற முடியாது என்றும், அவையெல்லாம் அவையவர்களின் காலகட்டத்தில் மாநிலத்திற்கும் மக்களுக்கும் நல்லதையே செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மக்களும் தாங்களும் முழுமையாகத் துணை நிற்போம் என்றும் அவர் கூறினார்.

மேலும், அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு தேர்வுக்குத் தயாராவது போல இரவு பகலாக விழித்திருந்து தீவிரமாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு அவைக்கு வருவதாகவும், ஆனால் இங்கு வருபவர்களுக்குப் பேசுவதற்கான முறையான வாய்ப்புகளே வழங்குவதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

எப்பொழுது பார்த்தாலும் சண்டை சச்சரவுகளாகவே இருந்தால் மக்களுக்கு இதனால் என்ன பலன் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், பொதுமக்கள் இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரலைகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் தாங்களாகவே டிவியை ஆஃப் செய்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாகத் தான் அவைக்கு வராமல் பொதுமக்களுடன் களத்தில் நேரடியாகச் சந்தித்துப் பேசியபோது மக்கள் தெரிவித்த கருத்துக்களை அவர் சுட்டிக்காட்டினார். ஆரம்பத்தில் சட்டமன்ற நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகச் சென்றதாகவும், தாங்களும் அதனை ஆர்வமுடன் கவனித்ததாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த மூன்று நான்கு நாட்களாக வெறும் சண்டைகள் மட்டுமே நடப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்றார்.

குறிப்பாக, முந்தாநாள் கூட்டத்தில் கடைசி வரை இரண்டு மானியக் கோரிக்கைகள் மீதுகூட விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை நினைவுகூர்ந்த அவர், இது தனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாகக் கூறினார். இது சட்டமன்றம் சண்டை மன்றம் இல்லை" எனவும் தெரிவித்தார்.

இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் இல்ல..டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்!