திருச்செந்தூர் விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிவில் கூறியுள்ளார்.

Hero Image

திருச்செந்தூர் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக விமர்சனம் எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு சாதி அடையாளங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் மக்களை ஏமாற்றி, சட்டவிரோதமாக பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே அரசின் கடமை. அதற்காகத்தான் மக்கள் எங்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "பக்தர்களிடம் கூடுதல் பணம் பெற்றால்தான் சேவை செய்ய முடியும் என்ற நிலை எந்த மதத்திலும் இல்லை. அது சேவையும் அல்ல. எந்தக் கடவுளும் அதை அனுமதிப்பதில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்" என கூறியுள்ளார்.

அதேபோல், "நேற்று வரை சாதி அடிப்படையில் அரசியல் செய்தவர்கள், இன்று அதே சாதியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி அரசை விமர்சிப்பது முரண்பாடானது. தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினால் ஏன் சிலருக்கு திடீர் பதற்றம் ஏற்படுகிறது என்பது புரியவில்லை" என்றும் அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்ற திடீர் ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், "இது தொடக்கம் மட்டுமே. கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.

பக்தர்களின் நலன் மற்றும் கோயில் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை தான் அரசின் முதன்மை நோக்கம் என்றும், கோயில்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு இனி எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்றும் அமைச்சர் ரமேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.