அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் என எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்தது. அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்டவை ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி வசமானது இரட்டை இலை சின்னம். மேலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிப்பு, ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை அதிமுக எம்எல்ஏல்க்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாட்டு மக்களுக்கு தீபாவளி போன்றது இன்றைய நாள். கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமியிடம் வந்துவிட்டது என்றார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாயை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது என்றார். இதுபோன்று, அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக, இனிமேல் ஏறுமுகம்தான், அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் எனவும் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரித்தார்.