பால் நிறுத்த போராட்டம்.. அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று, அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதனால், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர், திட்டமிட்டபடி இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்த வகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பால் நிறுத்த போராட்டம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பால் நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.