முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!
ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் தாயார் ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்து வைத்தார்.

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் சங்கமம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சிலையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்துவைத்தார். அப்போது பௌத்த மதச் சடங்குகள் பின்பற்றப்பட்டன.
முன்னதாக, அவரது நினைவு இடத்தில், அவரது முழு திருவுருவ சிலைக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், சென்னை உயிர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்பொழுது, ஆம்ஸ்ட்ராங் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அனுமதி அளிப்பதாக தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துவிட்டதாக அரசு கூறியதால், வழக்கு திரும்பப் பெறப்பட்டது.