“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!
ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், புதிய கட்சியான 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கினார்.

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொத்தூரில் உள்ள வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நினைவிடம் வந்தடைந்த பின், இன்று திருவள்ளூரில் அவரது நினைவிடத்தில் 9 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாயார் கமல்தாய் கவாய் திறந்து வைத்தார். அப்போது பௌத்த மதச் சடங்குகள் பின்பற்றப்பட்டன.
பின்னர், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, “தமிழ் மாநில பகுஜன் சமாஜ்” என்ற புதிய கட்சியையும், புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், சில அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.