வேலூர் கோட்டைக்கு வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறிய 6 பேரை சிறையில் அடைக்க உத்தரவு.
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 22-ஆம் தேதி வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்த பெண்ணை வீடியோ பதிவு செய்ததுடன் ஹிஜாப்பை அகற்ற சொன்னதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 7 பேரையும் நேற்றிரவுக்குள் கைது செய்தது வேலூர் போலீஸ். கைது செய்யப்பட்ட இந்தக் கும்பல் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது போன்ற செயல்கள் வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இந்த சமயத்தில் அம்மாவட்ட எஸ்பி கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறினார்.
இந்த நிலையில், வேலூர் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை 15 நாட்கள் சிறையிலடைக்க வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்விகாரத்தில் கைதான 7 பேரில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதால் அவரை தவிர மற்ற 6 பேரை வேலூர் மத்திய சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இர்பாஃன், இப்ராஹிம், பிரசாந்த், சந்தோஷ், பயாஸ் மற்றும் அஷ்ரப் ஆகிய 6 பேரை வரும் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.