வேங்கை வயல் தீண்டாமை விவகாரம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்.!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டு, அமைதி திரும்பி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரையில் விளக்கம்.

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டு, அமைதி திரும்பி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரையில் விளக்கம்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர்.  இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 70 க்கும் மேற்பட்டோர்களிடம் 20 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி போலீசார் , 147 பேரிடம் நடத்திய விசாரணையில் இறுதியாக 11 பேர் மீது இறுதிக்கட்ட விசாரணை, மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே மலம் கலந்த குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அந்த மாதிரிகளையும், 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனையும் பெறப்பட்டு இரண்டையும் ஒப்பிட கோரிய சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. மாதிரிகள் ஒப்பிட்டு பார்ப்பதற்காக தஞ்சாவூர் அல்லது சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பின் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்கள், சட்டப்பேரவை விவாதங்கள் என நீண்டு கொண்டே சென்ற புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, புதுக்கோட்டை வேங்கைவயல்கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டிருக்கிறது. அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.