வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேங்கை வயல், இறையூர் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், இறையூர் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்டம் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு 4 சிறுவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை நடக்க உள்ளது.
