தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!
சென்னையில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின் தாக்கத்தாலும் பல தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள், மயக்கமடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி கோரி நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மாடல் சர்க்கார், இப்போது சாரிம்மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது. எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா, பின் நீங்கள் எதுக்கு? உங்க ஆட்சி எதுக்கு? உங்க CM பதவி எதுக்கு சார்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 25-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த தொண்டர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டது.
மேலும், மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஒரு பெண் நிர்வாகி உட்பட சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி, 1,500-2,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர், மேலும் 8-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன.
இருப்பினும், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டதாகவும், ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.