எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சியில் வைத்திலிங்கம் பேட்டி
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இரட்டை இலை சின்னமும் இபிஎஸ் வசமானது. அதுமட்டுமில்லாமல், பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவில் விதி திருத்தம் மற்றும் மற்றும் நிர்வாகிகள் நீக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை:
இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக இல்லாத வேறு யாரும் பயன்படுத்த கூடாது, அப்படி மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிமுக சார்பில் புகார்:
மேலும், திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் தரப்பு மாநாடு நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த கூடாது எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.
வைத்திலிங்கம் பேட்டி:
இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. வழக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றார்.
உண்மையான அதிமுக:
மேலும், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான், நாங்கள் தான் உண்மையான அதிமுக. மேலும், இரட்டை இலை அவர்களுக்கு நிரந்தரமாக உறுதியாக வில்லை என தெரிவித்தார்.