சென்னை :தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் நோக்கி இத்தாழி நகரக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வானிலை தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.12.2025) வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம். பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
நாளை (09.12.2025) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோர பகுதிகளில் மழை துவங்கி இரவு நேரத்தில் பரவலாகும். குறிப்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் டிசம் 10,11 விட்டு விட்டு மழை பதிவாகும். ஒருசில இடங்களில் கனமழையும், கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்ப்பார்க்கப்படுவதால், வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
வடமாவாட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து விதமான வேளாண் பணிகளையும் திட்டமிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரையில், இன்று (08-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
