கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய அனுமதி கோரி நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியதாகக் கூறப்படும் நித்யானந்தா, “கைலாசா” என்ற பெயரில் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். இந்த “கைலாசா” நாடு எங்கு உள்ளது, அதன் சட்டபூர்வ நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை, இதனால் இது ஒரு கற்பனை நாடு என்று பலரால் கருதப்படுகிறது. இப்படி, நித்தியானந்தாவின் ‘கைலாசா’ நாடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நித்யானந்தா தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் “நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது?” என்று கேள்வி எழுப்பியதற்கு, இந்த கேள்விகளுக்கு நித்தியானந்தா சீடர் பதில் அளித்துள்ளார். இது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து, நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி முரளி சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்தபோதுதான் நீதிபதிகள் நித்யானந்தாவின் இருப்பிடம் மற்றும் கைலாசாவின் அமைவிடம் குறித்து கேள்வி எழுப்பினர். அதன்படி நீதிபதிகள், “நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது? மனுதாரர் கைலாசாவுக்கு சென்று வந்தாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளனவா?” என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர், “நித்யானந்தா ஆஸ்திரேலியாவுக்கு அருகே ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ (U.S.K.) என்ற தனி நாட்டில் உள்ளார்” என்று பதிலளித்தார். மேலும், கைலாசாவுக்கு ஐ.நா. அங்கீகாரம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, இந்த வழக்கில் மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.