சென்னை : தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. 'திமுக கூட்டணியில் இனி இடதுசாரிகள் இல்லை' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் நீடிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (KMDK) தலைவர் ஈஸ்வரன், கூட்டணியை விட்டு வெளியேறிய கட்சிகளையும், தவெக (TVK) அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களையும் கடுமையாகச் சாடி மேடையில் கொந்தளித்துப் பேசியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகத்தின் அறிவிப்பிற்கு எதிராக ஈஸ்வரன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், கம்யூனிஸ்டுகாரரு சண்முகம் 'திமுக கூட்டணி இல்லை' என்று சொல்வதற்கு யார்? தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே இல்லை என்று அறிவிக்க அவர் யார்? ஏனென்றால் கொமதேக உள்ளிட்ட நாங்களெல்லாம் இன்னும் அதே கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்தக் கூட்டணியும் இல்லை என்று டிக்ளேர் செய்ய சண்முகத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? 'நாங்கள் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் இல்லை' என்று வேண்டுமானால் அவர் சொல்லிக் கொள்ளட்டும். அதை விடுத்து திமுக கூட்டணியே இல்லை என்று பேசுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பினார்.
தவெக (TVK) அரசுக்கு வெளிப்புற ஆதரவு கொடுத்துவிட்டு, இன்னும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறிவந்த சில தலைவர்களின் இரட்டை நிலப்பாட்டை ஈஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
வெறும் ரெண்டே ரெண்டு எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு முதலமைச்சராக வேண்டுமாம்! அவர்தான் தமிழ்நாட்டின் ஒரே கொள்கை தலைவராம். தவெக அரசு அமைய ஆதரவு தரத் தயாராக இருப்பதாக இரண்டு நாட்களாகக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடந்தார்கள். பேரங்கள் படியாததால், 'நாங்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவோம், ஆனால் திமுக கூட்டணியில்தான் தொடருவோம்' என்று இவர்களாகவே புதுக்கதை பேசுகிறார்கள்.
அவர்கள் தவெக-வை ஆதரித்தாலும் திமுக கூட்டணியில் நீடிக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களோ அல்லது திமுகவில் இருக்கும் வேறு யாராவது சொன்னார்களா? இவர்களாகவே முரண்பாடான கருத்துக்களைப் பேசிவிட்டு, இப்போது வாய் மாறுகிறார்கள்" என தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு கூட்டணி கூட்டத்திலும் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தூக்கித் தூக்கி வைத்து எவ்வளவு பெருந்தன்மையோடும் மென்மையோடும் நடத்தினார் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். கரூரில் 41 பேரை அவர்கள் கொன்றபோது கூட தலைவர் பெருந்தன்மையாகவே இருந்தார். சில நேரங்களில் தலைவரின் இந்த அதீத பெருந்தன்மைதான் நமக்கு பலவீனமாகப் போய்விட்டதோ என்று நான் யோசிப்பதுண்டு. அதைச் சாதாரணமாகப் பயன்படுத்திக் கொண்டு, இன்றைக்கு எல்லாரும் தங்களின் சுய ஆதாயத்திற்காக ஏமாற்றிவிட்டுப் போகிறார்கள்" எனவும் தெரிவித்தார்.
