SenthilBalaji Case : இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரா.? உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.!

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது அவர் அமலாக்கத்துறை விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழக அரசில் பொறுப்பேற்று இருந்த இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. இருந்தும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள ஒருவர் அமைச்சராக தொடரக்கூடாது என்ற சட்ட விதிகள் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் சிறையில் உள்ள ஒருவர் எப்படி அரசு பணிகளை முழுமையாக செய்ய முடியும் எனவே அவர் அமைச்சராக தொடரக்கூடாது என மனுதாரர் தரப்பும் தொடர்ந்து வாதிட்டது. இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வாரா என்ற கேள்விக்கு இன்று நீதிமன்ற தீர்ப்பு மூலம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சார துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.