பாஜக நிர்வாகி அமர் பிரசாத், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல் ட்வீட்.
பாஜக நிர்வாகிகள் விலகல்:
சமீப நாட்களாக தமிழ்நாடு பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் தங்களது பொறுப்பில் இருந்து விலகியது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்திருந்தார். நிர்மல் குமார் விலகிய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.
விமர்சனம்:
இதையடுத்து, இன்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திலீப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நிர்மல் குமாரை போல் தனது ட்விட்டர் பக்கத்திலும் திலீப் கண்ணன், மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். இதுபோன்று, பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
எடப்பாடிக்கு கண்டனம்:
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளரும், பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்று பேர்வழி என்று விமர்சித்துள்ளார்.
சரியான பாடம்:
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல் குமாரை அதிமுகவின் சேர்த்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது, கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய எடப்பாடி பழனிசாமிக்கு வாக்காளர்கள் சரியான பாடத்தை புகட்டியுள்ளனர். 66,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டியுள்ளது என கூறியுள்ளார்.
தலைமைக்கு தகுதியானவரா?:
4 ஆண்டுகாலம் ஏமாற்ற பேர் வழிகளாக வளம் வந்தவர்களின் கதைகள் ஊரறிந்த கதை. கட்சி மாறி, பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை வேகலப்படுத்தி ரசிப்பவர் தலைமைக்கு தகுதியானவரா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றுள்ளார்.
ஜனநாயக மரபு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி நீடிக்குமா?
இந்த சமயத்தில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருப்பதால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்றும் கேள்வி எழுகிறது. பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக 2024 தேர்தலுக்கு முன் முடிவு அறிவிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில், அமர் பிரசாத் விமர்சித்திருப்பதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.