பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் அமெரிக்கர்களுக்கு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரேடார் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நடந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அதன் ஊழியர்களை பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், லாகூரை விட்டு வெளியேற முடியாத அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய கூறியுள்ளது.
மேலும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களையும், அமெரிக்க குடிமக்களையும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. லாகூரில் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்து அழித்த நிலையில், லாகூர் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இதனால், லாகூரில் வான் வழி பதற்றம் உள்ள நிலையில் உளவுத்துறை அடிப்படையில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.