அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த இயற்கை பேரழிவு அமெரிக்க மக்களை உலுக்கியுள்ளது.

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.
பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த இயற்கை பேரழிவு அமெரிக்க மக்களை உலுக்கியுள்ளது.
30 செ.மீ. அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் சுமார் 26 அடி உயர்ந்தது, இதனால் பல வாகனங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது,ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திடீர் வெள்ளம் காரணமாக, கெர் கவுண்டியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, வாகனங்கள் கவிழ்ந்தன, பல கட்டிடங்களும் சேதமடைந்தன. எங்கும் பார்த்தாலும் சேறாக தெரிகிறது, இதனால் சேறு நிறைந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.