ஈரானின் வடமேற்கு பகுதியில் எரிவாயு (கேஸ்) வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு ஈரானில் புக்கான் நகரில், குடியிருப்பு கட்டிடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட, 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எரிவாயு(கேஸ்) கசிந்து வெடித்து அதன்மூலம் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானின் வடமேற்கு மாகாணமான மேற்கு அஜர்பைஜானில், உள்ள இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இரவு நேரம் இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதுவரை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என்று தீயணைப்பு அதிகாரி ரசூல் மரூபி கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர், என்று அவர் கூறினார். விபத்துக்கான முக்கிய காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரசூல் மேலும் தெரிவித்தார்.