அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தராக இந்தியாவால் செயல்பட முடியும் - ரஷ்யா!

அமெரிக்கா - ஈரான் இடையே சிறந்த மத்தியஸ்தராக இந்தியாவால் செயல்பட முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

Hero Image

அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்போதைய பதற்றத்தைத் தீர்க்க நீண்டகால ராஜதந்திரியாக இந்தியா பங்கு வகிக்க முடியும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லாவ்ரோவ், “தற்போது உடனடி பிரச்சனைகளைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. ஆனால், ஈரான் மற்றும் அதன் அரபு நாடுகளுக்கு இடையே நீண்டகால அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியாவின் விரிவான ராஜதந்திர அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியா தற்போது பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பில் உள்ளது. இப்பகுதியில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடு இந்தியா. எனவே, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி, மோதல்களைத் தவிர்க்க இந்தியா முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில், லாவ்ரோவின் இந்தப் பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர், “சில நாடுகள் ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான பகைமையை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. ஆனால் ரஷ்யா அதற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

மேலும், இந்தியாவின் ராஜதந்திர வரலாற்றைப் பாராட்டிய லாவ்ரோவ், கொரிய முன்னெடுப்பு, சூயஸ் நெருக்கடி, ஈரான்-ஈராக் போர் உள்ளிட்ட சர்வதேச அமைதி முயற்சிகளில் இந்தியா வகித்த பங்கை சுட்டிக்காட்டினார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை “சிறப்பு மூலோபாய கூட்டு” என வர்ணித்த லாவ்ரோவ், இரு நாடுகளும் 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை எட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திலிருந்து விலகி, சுயாதீன நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.