இந்தியா – இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.!
2 நாட்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றார்.

லண்டன் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜூலை 23-26, 2025 அன்று இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ஜூலை 23-24 தேதிகளில் இங்கிலாந்து சென்று, அங்கு பிரதமர் கெயிர் ஸ்டாமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டார்.
அதன்படி, இந்தியா – இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) நேற்றைய தினம் லண்டனில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டாமர் முன்னிலையில் முடிவுக்கு வந்தது.
இதனால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 2.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 90% வர்த்தகத் தடைகளை நீக்கி, தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்புக்கான திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதுடன், 2035ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸையும் சந்தித்து, “ஏக் பேட் மா கே நாம்” மரம் நடுதல் முயற்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று ஒன்றை பரிசாக வழங்கினார். 2 நாட்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றார்.